


























Updated on
:
1 min read
புதுடெல்லி: கடந்த 1995-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த சிமெண்ட் தொழிலதிபரின் 13 வயது மகன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான். விசாரணையின் அடிப்படையில் தொழிலதிபரின் பக்கத்து வீட்டுக்காரரான சலீம் கானை (தற்போது சலீம் வாஸ்திக்) போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி சலீம் கான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அனிலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சலீம் நவம்பர் 24, 2000 அன்று இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால் அதன் பிறகு அவர் தலைமறைவானார். 2011-ல் உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தபோதும் அவர் பிடிபடவில்லை.
இதனிடையே, அவர், சலீம் வாஸ்திக் மற்றும் சலீம் அகமது என பெயரை மாற்றி உள்ளார். 2010-ல் உ.பி.யின் காசியாபாத்துக்கு இடம்பெயர்ந்த அவர், பெண்களுக்கான ஆடை விற்பனை நிலையத்தைத் தொடங்கினார். ஒரு சமூக ஆர்வலராகவும், மதம் மற்றும் தீவிரவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசும் யூடியூபராகவும் பிரபலமானார்.
இந்த சூழலில் கடந்த மாதம், காசியாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த சலீமை, இருவர் கத்தியால் குத்தி உள்ளனர். “எங்கள் நபியை நீங்கள் அவமதிக்கிறீர்கள்” என்று கத்தியபடி அவர்கள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் படுகாயமடைந்த சலீம், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இருவரும் பின்னர் தனித்தனி என்கவுன்ட்டர்களில் உயிரிழந்தனர். சலீமின் மகன் உஸ்மான் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், சிறுவனைக் கொன்ற வழக்கில் தேடப்படும் நபர் இவர்தான் என தெரியவந்தது. இதையடுத்து, சலீம் கைது செய்யப்பட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。