




















பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்
Updated on
:
1 min read
சென்னை: ‘பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசின் மறைமுக அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம். தவெகவின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கைதான்’ என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வந்து சேரவில்லை. இது மாணவர்களுக்கானது. எந்தக் காரணத்துக்காகவும் அதை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேசமயம் எந்தவித மறைமுக அழுத்தத்துக்கும் நாங்கள் அடிபணிபவர்கள் கிடையாது. கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. இருமொழிக் கொள்கை என்பது கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது” என்று கூறினார்.
பிஎம்ஸ்ரீ திட்டம் பின்புலம்
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் தமிழகம் இணைய மறுத்துவிட்டது. இதன் காரணமாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலமாக தமிழகத்துக்கு தரவேண்டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இந்த விவகாரம் கடந்த திமுக ஆட்சியில் பெரும் சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாக, மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியது. பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின்கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. தவெக தலைமையில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தவெக என்ன முடிவெடுக்கும், முந்தைய திமுக அரசு போல எதிர்ப்பு தெரிவிக்குமா அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா, நிறுத்தி வைக்கப்பட்ட கல்விக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என பல கேள்விகள் எழுந்தது கவனிக்கத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。