










Updated on
:
1 min read
இம்பால்: மணிப்பூரில் கடந்த 7-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஐந்து நாள் முழு அடைப்புப் போராட்டம் நேற்று தொடங்கியது. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
மணிப்பூரின் பிஷ்ணுபூர் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐந்து வயது சிறுவனும், ஐந்து மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாநிலத்தின பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மீரா பைபிஸ் (பெண் தீப்பந்தம் ஏந்துவோர்) என்ற அமைப்பு உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் கூட்டமைப்பு மூலம் ஐந்து நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டம் நேற்று தொடங்கியது. மணிப்பூரின் மலை மாவட்டங்களில் செயல்படும் குக்கி தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டத்தின் முதல் நாளான நேற்று சந்தைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போக்குவரத்துச் சேவை ஆகியவை முடங்கின. சில பகுதிகளில் அத்தியாவசியச் சேவைகள் மட்டும் இயங்கின. மெய்த்தி சமூகத்தவர்கள் அதிகம் வசிக்கும் பள்ளத்தாக்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இரவு நேரப் பேரணிகளும் நடந்தன. காக்சிங் மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களைக் களைக்க பல இடங்களில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் நடத்தப்படும் பேரணிகளில் போராட்டக்காரர்களோடு சமூக விரோதிகள் ஊடுருவி வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதாகவும், பாதுகாப்புப் படையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதாகவும் தெரிவித்துள்ள மணிப்பூர் போலீஸார், வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் தூண்டுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, சமூக ஊடகங்கள் மூலம் பதற்றத்தைத் தூண்டியதாக லம்யான்பா மேத்தி (23) என்ற இளைஞரை கைது செய்துள்ள போலீசார், பலரை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。