


























Updated on
:
1 min read
புதுடெல்லி: ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி அணி நிர்ணயித்த 76 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய பெங்களூரு அணியில், விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தச் சாதனையை எட்ட அவருக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவர்பிளேயின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்ததன் மூலம் 9,000 ரன்கள் என்ற சாதனையை படைத்தார்.
தற்போது 275 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 9,012 ரன்களுடன் (சராசரி 40.05) ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாம் இடத்தில் உள்ள ரோஹித் சர்மாவை விட இவர் 1,900 ரன்கள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் பேட்டிங்கை புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் ஜோடி 75 ரன்களுக்குள் சுருட்டியதால், கோலிக்கு அழுத்தம் ஏதுமின்றி விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. துஷ்மந்த சமீராவின் பந்தில் பவுண்டரி அடித்துத் தனது ரன் கணக்கைத் தொடங்கிய கோலி, ஆரம்பத்தில் விவேகத்துடன் ஆடினார். நடராஜன் வீசிய ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.
ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 58.50 சராசரியுடன் 351 ரன்களைக் குவித்துள்ளார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். தற்போது இந்த சீசனின் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கோலியின் இந்த அபாரமான ஃபார்ம் பெங்களூரு அணிக்கு அடுத்தடுத்த போட்டிகளில் பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。