
























Updated on:
சென்னை: மாநகராட்சி தூய்மைப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட்டு, நேரடியாக அரசே இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் “தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் இத்திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்களின் நவீன இயந்திரங்கள் மற்றும் மேலாண்மைத் திறனை பயன்படுத்தி நகரங்களின் சுகாதாரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துவதாகும். சென்னையைத் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் தூய்மைப் பணிகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டபோது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு மற்றும் ஊதியக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது 12 மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மைப் பணியை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களை மட்டும் தங்கள் பங்களிப்பாக கொண்டு, மாநகராட்சியின் பணிமனை, வார்டு அலுவலகங்கள், குப்பை கொட்டும் இடங்கள் உள்ளிட்ட அரசு உள்கட்டமைப்புகளையே பயன்படுத்துகின்றன.
எனவே, இப்பணியை அரசே நேரடியாக மேற்கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டி, தேர்தலுக்கு முன்பு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தவெக அரசு, தனது வாக்குறுதிக்கு ஏற்ப செயல்பட்டு, தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எல் நினோ காலநிலை மாற்றத்தால், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படலாம். எனவே, விவசாயிகளுக்கு குறுகிய கால மாற்றுப் பயிர் சாகுபடி குறித்து வேளாண்மைத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。