










Updated on:
சென்னை: முதல்வராக பதவியேற்ற பின் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த திட்டங்களுக்கு பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: முதல்வராக பதவியேற்றவுடன் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கவும், போதை ஒழிப்புக்கு சிறப்புப் படை உருவாக்கவும் முதல்வர் ஜோசப் விஜய் முதல் கையொப்பமிட்டதை வரவேற்று நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனே நடத்த வேண்டும். அதைக்கொண்டு உரிய சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தில் முழு மதுவிலக்கையும் கொண்டு வர வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் இன்றைய தலையாய தேவைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டியதும் தான்.
அவற்றுக்கு வகை செய்யும் வழியில், தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப் விஜய் பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க காவல் துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தின் இன்றைய முக்கிய தேவைகளில் இன்னொன்று சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்துவது. சமூகநீதியில் தமிழகத்தை தனித்துவப்படுத்திக் காட்டுவது 69 சதவீத இட ஒதுக்கீடுதான்.
ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் கூட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால், நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே அதற்கு செயல்வடிவம் கொடுக்க புதிய அரசு முன்வர வேண்டும். டாஸ்மாக், மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி தமிழகத்தில் முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என அறிவித்திருப்பதையும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் என்று அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。