

























Updated on
:
1 min read
புதுடெல்லி: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் , கூடுதலாக ரூ.10,00 செலுத்த ஹஜ் கமிட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 அமெரிக்க டாலர் வரை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இதனால், விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஹஜ் பயணத்துக்கு விமானங்களை அனுப்பும் விமான நிறுவனங்கள், அடிப்படை கட்டணத்தை உயர்த்தி வழங்கும்படி ஹஜ் கமிட்டியிடம் கூறியுள்ளன. இதையடுத்து இந்தாண்டு ஹஜ் பயணம் செல்வோர், ரூ.10,000 கூடுதல் கட்டணத்தை மே 15-ம் தேதிக்குள் செலுத்தும்படி சிறுபான்மையினர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஹஜ் கமிட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி, ‘‘ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணியிடமும் ஹஜ் கமிட்டி ஏற்கெனவே ரூ.90,000 வசூலித்துவிட்டது. அவர்களிடம் கூடுதலாக ரூ.10,000 செலுத்தும்படி கூறுவது நியாயம் இல்லை. ஹஜ் கமிட்டி மூலம் செல்வதால், ஹஜ் பயணிகள் தண்டிக்கப்படுகிறார்களா? இது சுரண்டல், பெரும்பாலான பயணிகள் வசதியற்றவர்கள்.
அவர்கள் ஹஜ் பயணத்துக்காகப் பல ஆண்டுகளாக பணத்தை சேமிக்கின்றனர். இந்த சுற்றறிக்கை உடனடியாக திரும்பப் பெறப்பட்டு கூடுதலாக பெறப்பட்ட பணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்’’ என்றார். இதற்கு விளக்கம் அளித்துள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘பல குடும்பங்களுக்கு ஹஜ் பயணம் வாழ்நாள் கனவு.
அந்த உணர்வை நான் மதிக்கிறேன். விமான எரிபொருள் கட்டணம் உயர்வால், ஒவ்வொரு பயணிக்கும் 300 டாலரில் இருந்து 400 டாலர் வரை விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வழங்கும்படி விமான நிறுவனங்கள் கேட்கின்றன. எரி பொருள் கட்டண உயர்வுக்கு, விமான நிறுவனங்களை நாம் குறை கூற முடியாது. பேச்சுவார்த்தை மூலம் ஒவ்வொரு பயணியிடமும் ரூ.10,000 (100 டாலர்) மட்டும் கூடுதல் தொகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது’’ என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。