


























Updated on:
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டிடம் முற்றிலுமாக இடிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி மாலதி (25), புளியங்குளத்தை சேர்ந்த ஆத்தியப்பன் மகன் ஐயப்பன் (30) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ் (25) என்பவர் காயமடைந்தார்.
தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரின் சடலங்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த சூரிய பிரகாசுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி மாரீஸ்வரி (30), கட்டிட உரிமையாளர் குருநாதன் (65) ஆகிய 3 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், மாரீஸ்வரி மற்றும் குருநாதன் ஆகிய 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。