














Updated on
:
1 min read
சென்னை: அரசு பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறைகள், கணினிகள் ஆகியவற்றின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 6,992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
திறன்மிகு வகுப்பறைக்காக ஒலி-ஒளி அமைப்புகள், இன்டராக்டிவ் பிளாட் பேனல்கள், டிஜிட்டல் கற்றல் மேலாண்மை அமைப்புகள் (எல்எம்எஸ்) பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் தடையற்ற இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகள் பாடப் பகுதிகளை வீடியோக்கள், முப்பரிமாண(3-டி) அனிமேஷன் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளவும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவுகிறது.
இந்த நிலையில் கோடை விடுமுறையில் திறன்மிகு வகுப்பறைகளின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள கணினி, திறன் பலகை ஆகியவற்றை முறையாக ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அதேநேரத்தில் ட்ரிப்பர், கண்காணிப்பு கேமரா, யுபிஎஸ், மின் இணைப்பு மீட்டர் ஆகியவற்றின் பொத்தான்களை அணைக்கக் கூடாது.
கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழைச் சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் ஆகியவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கூடாது. இவை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。