
























Updated on:
மேட்டூர்: மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 50 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 83 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் சமையல், தூய்மைப் பணி, பிளம்பர், தோட்ட வேலை, சலவை, காவலர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் மாதந்தோறும் ரூ.13,000 சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 50 நாட்களுக்கு மேலாகியும் தனியார் நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை. தனியார் நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களிடம் சம்பளம் தொடர்பாக உரிய பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை மருத்துவமனை வளாகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் அரசு மருத்துவமனை நிர்வாக்கம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மேட்டூர் வட்டாட்சியர் செந்தில்குமார் ஒப்பந்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சம்பளம் வழங்காத நிறுவனத்திடம் பேசாமல் எங்களிடம் பேச வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அனைத்து தொழிலாளர்களுடன் கருத்து கேட்ட நிலையில் சம்பளம் கிடைக்காமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிவகாமி மற்றும் மஞ்சு ஆகிய 2 தொழிலாளர்கள் திடீரென மயக்கமடைந்தனர். அவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறியது: “மாதந்தோறும் 7-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 50 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்கவில்லை இதனால் வீட்டு வாடகை, குழந்தையின் படிப்பு செலவு, வீட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருவதாக தெரிவித்தனர். எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
போராட்டத்தை கைவிட வலியுறுத்திய தவெக நிர்வாகிகளால் பரபரப்பு:
இதனிடையே, மேட்டூர் நகரத்தை சேர்ந்த அதிமுக, திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசி சென்றனர்.
அதேபோல், தவெக நிர்வாகிகள் சிலர் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என தெரிவித்து போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர்கள் எங்களுக்கு ஆதரவாக பேசாமல் நிறுவனத்திற்கு ஆதரவாக பேச வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。