





















Updated on:
புதுடெல்லி: இந்தியாவில் நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை ஏமாற்றும் நோக்கில், டெலிகிராம் செயலியில் போலி வினாத்தாள்கள் பரப்பப்படுவதாகக் கூறி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்த செயலிக்கு ஒரு வாரம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாவெல் துரோவ் தனது எக்ஸ் பக்கத்தில், “கசிந்த வினாத்தாள்களை சில பயனர்கள் பகிர்ந்துகொண்டனர் என்பதற்காக, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டெலிகிராம் செயலியை ஒரு வாரத்திற்குத் தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை வினாத்தாள்களை கசியவிட்ட உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கவில்லை. மாறாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களையே தண்டித்துள்ளது. இந்தத் தடையால் எதுவும் நின்றுவிடப் போவதில்லை. வினாத்தாள் கசிவுகள் இப்போது பிற செயலிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டன" என்று தெரிவித்துள்ளார்.
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை முன்னிட்டு, ‘PAPER LEAKED NEET’, ‘Re-NEET 2026’ போன்ற பெயர்களில் இயங்கி வந்த போலி நெட்வொர்க்குகளை கண்காணித்த தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-இன் கீழ் இந்தத் தடை ஜூன் 22 வரை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வுக்குப் பிறகு பழைய செய்திகளை எடிட் செய்து வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது போன்ற போலி ஆதாரங்களை உருவாக்குவதைத் தடுக்க, ஜூன் 30 வரை டெலிகிராமின் மெசேஜ் எடிட்டிங் வசதியையும் முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டெலிகிராம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。