
























Updated on:
தாம்பரம்: குடும்பத் தகராறு காரணமாக கூலிப்படையை ஏவி கணவரின் காலை உடைக்கச் செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை பீர்க்கன்காரணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தாம்பரம் அருகே வேங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (40) என்பவருக்கும் வசந்தா என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் வசந்தா வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வசந்தா கேட்டதாகவும், அதற்கு தாமோதரன் மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தா, கணவரைப் பழிவாங்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தாமோதரனுக்கு பார்சல் வந்துள்ளதாக கூறி அவரது முகவரியை பெற்ற மர்ம நபர்கள், வீட்டுக்கு வந்து பார்சல் கொடுப்பது போல் நடித்து இரும்பு பைப்பால் தாக்கி வலது காலை உடைத்தனர்.
தடுக்க வந்த அவரது வயதான தாயாரையும் கீழே தள்ளி தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பீர்க்கன்காரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பைக் எண்களை வைத்து மேற்கொண்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பரத், அகஸ்டின் என்பதும், அவர்கள் பிரபல ரவுடி பொன்மணி மூலம் கூலிப்படையாக செயல்பட்டதும் தெரிந்தது. மேலும், வசந்தா தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் கால்களை மட்டும் உடைக்க ரூ.4 லட்சம் பேரம் பேசி, முன் பணமாக ரூ.3.50 லட்சம் வழங்கியதாக விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து வசந்தா, ரவுடி பொன்மணி, பரத் ஆகியோரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட அகஸ்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாக போலீஸார் கூறினர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。