






















Updated on
:
1 min read
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
வாக்களித்தவர்கள் பலர் எங்கள் போராட்டத்துக்குஆதரவாக இருந்தவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே வாக்களித்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேர்தலைப் புறக்கணித்திருந்த மக்கள், இம்முறை தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர். பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.
சாதகமான மாற்றம் ஏற்படும் இதுகுறித்து அந்தப் பகுதி மக்களிடம் கேட்டபோது தங்கள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாதவர்களுக்குப் பாடம் புகட்டவும், தங்களுக்கு ஆதரவாகத் தோள் கொடுத்தவர்களுக்குப் பலம் சேர்க்கவும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் கூறும்போது, “எங்களது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களது முதன்மையான நோக்கம். கடந்த முறை தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் எங்களது கோபத்தைப் பதிவு செய்தோம்.
ஆனால் இந்த முறை, எங்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து எங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகப் புறக்கணிப்பு முடிவைக் கைவிட்டோம்" என்றனர்.
வாக்களிக்க வந்த மக்கள் பலரும், குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம்தமிழர் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தங்களது போராட்டத்துக்கு உறுதியாக நின்று ஆதரவு அளித்ததாக தெரிவித்தனர்.
புதிய அரசு அமைந்ததும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் தங்களுக்குச் சாதகமான மாற்றம் ஏற்படும் என மக்கள் நம்புகின்றனர். இதுகுறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுச் செயலாளர் சுப்பிரமணி கூறும்போது, “தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதையும், அதன் மூலம் அமையப்போகும் புதிய அரசையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
புதிய அரசு அமைந்தவுடன் எங்கள் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, எங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது நடக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。