












Updated on:
சென்னை: சென்னையில் நல்லகண்ணுவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு வலியுறுத்திஉள்ளது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு கூட்டம் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் கே.பாரதி, மாநில தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணுவின் போராட்ட வரலாற்றையும், தியாகத்தையும் எடுத்துச் சொல்லும்விதமாக சென்னையில் அவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும். மேகேதாட்டு அணை திட்டத்தை கர்நாடக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.
பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தனிச் சட்டம்
பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே போதைப்பொருள் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை காவல்துறை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.
சாதிய படுகொலைகளை தடுக்க தனிச் சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற முன்வர வேண்டும் என்பன உள்பட 8 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம், ஊழல் இல்லாத, சாதி மதவெறியற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என்ற வகையில் 1 கோடி பேர் கையெழுத்திடும் இயக்கம் ஜூலை 5 முதல் 25-ம் தேதி வரை 5 ஆயிரம் இடங்களில் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。