






















Updated on:
புதுடெல்லி: இந்தியாவின் உயர்கல்வித் துறைக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), ஐஐடி, ஐஐஎம் மற்றும் என்ஐடி போன்ற ஒரு சில உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே மொத்த நிதியில் பாதியை தட்டிச் செல்கின்றன. ஆனால், நாட்டின் 97% மாணவர்கள் பயிலும் இதர நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் போதிய நிதியின்றி தவிக்கும் நிலை தொடர்கிறது.
இது வெறும் நிதிப் பகிர்வு தொடர்பான சிக்கல் மட்டுமல்ல, யாருடைய எதிர்காலத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடியாகவும் உள்ளதாக கல்வி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் ஜேஇஇ தேர்வை 15 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஆனால், அங்குள்ள இடங்களோ வெறும் 18,191 மட்டுமே. இதே நிலைதான் மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்விலும் நிலவுகிறது.
எய்ம்ஸ் போன்ற முதன்மை நிறுவனங்களில் சேர லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுகின்றனர். கல்வித் தாகம் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை கோடிகளில் இருக்க, வாய்ப்புகள் மட்டும் மிகக் குறுகிய அளவில் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஐஐடி, ஐஐஎம் மற்றும் என்ஐடி-களில் ஆண்டுதோறும் சுமார் 60,000 இடங்கள் மட்டுமே உள்ளன. இது ஒட்டுமொத்த மாணவர்சேர்க்கையில் வெறும் 2.6% ஆகும். இருப்பினும், உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் மொத்தபொது நிதியில் 50%-க்கும் அதிகமான தொகையை இந்த 3 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே பெறுகின்றனர். மறுபுறம், 97% மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் 650-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் எஞ்சிய 50% நிதியைக் கொண்டு இயங்க வேண்டி உள்ளது.
2026-27 நிதியாண்டில், உயர்கல்வித் துறைக்கு மொத்தம் ரூ.55,727.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 75 நிறுவனங்களை மட்டுமே உள்ளடக்கிய ஐஐடி, ஐஐஎம் மற்றும் என்ஐடி-களுக்கு மட்டும் ரூ.18,675 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஐஐடி-களுக்கான ஒதுக்கீடு ரூ.12,123 கோடியாகவும், என்ஐடி-களுக்கான ஒதுக்கீடு ரூ.6,260 கோடியாகவும், ஐஐஎம்-களுக்கான ஒதுக்கீடு ரூ.292 கோடியாகவும் உள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்கள் 57 உள்ளன; அவற்றில் சுமார் 2.9 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அவற்றுக்கு ரூ.17,440.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் 3.2 கோடி மாணவர்களின் நிலைதான் கேள்விக்குறியாக உள்ளது. போதிய நிதியின்மையால் அங்கு உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் நியமனம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。