



























Updated on:
விக்டோரியா: தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார்.
இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகி உள்ளன. பொன் விழா ஆண்டான இதைக் குறிக்கும் வகையில் நாளை (ஜூன் 29) நடைபெறும் சீஷெல்ஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியும் அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியும் தேசிய தாவரவியல் பூங்காவுக்குச் சென்றனர். அங்கு வசிக்கும் சுமார் 194 ஆண்டுகள் வயதுடையதாக கருதப்படும் ‘ஜொனாத்தன்' என்ற ராட்சத ஆமை உள்ளிட்ட ஆமைகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அவற்றுக்கு உணவு அளித்து மகிழ்ந்தார். பின்னர் இரு தலைவர்களும் இருதரப்பு உறவின் பொன் விழா நினைவாக ஒரு மரக்கன்றை நட்டனர்.
ஜொனாத்தன் உலகின் மிக வயதான நிலத்தில் வாழும் விலங்கு என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மிக வயதான காலத்திலும், ஜொனாத்தன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. அதன் நீண்ட ஆயுட்காலம், முதுமை மற்றும் ஆயுள் நீட்டிப்பு குறித்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு, அவரைப் பற்றிய ஆய்வை மிகவும் சுவாரசியமான ஒன்றாக மாற்றுகிறது.
இப்பயணத்தின் போது, பிரதமர் மோடி சீஷெல்ஸ் அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது, இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்வது, கடல்சார் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கடைசியாக 2015-ம் ஆண்டு சீஷெல்ஸுக்குப் பயணம் மேற்கொண்டார். தற்போதைய பயணம் இரு நாட்டு மக்களிடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என்றும், பொருளாதார மற்றும் ராஜதந்திர ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。