






















Updated on:
சென்னை: விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அளித்தார். சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
2011 முதல் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக தொடர்ந்து 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.விஜயபாஸ்கர். மேலும், 2013-ஆம் ஆண்டு முதல் 2021 வரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக அவர் பதவி வகித்தவர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின்னர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், முதல்வர் விஜய்க்கு ஆதரவாகவும் 25 அதிமுக எம்எல்ஏக்கள் வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையில் அணி திரண்டனர். அந்த அணியில் முக்கியமானவராக சி.விஜயபாஸ்கர் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களின் கட்சி பொறுப்பினை பறித்த பழனிசாமி, புதிய நபர்களை உடனடியாக நியமித்தார். அப்போது சி.விஜயபாஸ்கரின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது.
ஒருகட்டத்தில் வேலுமணி அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பலரும் பழனிசாமியுடன் கைகோத்தனர். ஆனாலும், சி.விஜயபாஸ்கர் மட்டும் பழனிசாமியை நேரில் சந்திக்காமல் தவிர்த்தார். அதன்பின்னர் 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இந்தச் சூழலில், சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை இப்போது ராஜினாமா செய்துள்ளார். அவர் அடுத்ததாக தவெகவில் இணைவாரா அல்லது திமுகவில் இணைவரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக இன்று சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல. ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?. உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。