

























Updated on:
சென்னை: திருவள்ளுவருக்கு காவி பூசுவதும், அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளர்.
இதுதவிர, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி உள்பட பல கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர்.
அவரை ஒருகுறுகிய வட்டத்துக்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறு மைப்படுத்துவதற்குச் சமம். மக்கள் பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு.
திருவள்ளுவர் எந்தவொரு மதத்துக்கும், சாதிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது.
அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்துக்கு முரணானது.
வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவத்தை தான். வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்துக்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்துக்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம்.
அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.
அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்கப்படுத்தாதீர்கள். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் எப்போதுமே மியூட்-ல இருக்கிறார் என்ற தைரியத்தில் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயின்ட் அடித்து உள்ளனர்.
தமிழக அரசு ஜனவரியில் திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமாக கொண்டாடுகிறது. ஆனால், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாளாக புதியதாக ஒரு தகவல் எங்கே இருந்து வந்தது? வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் சோஃபா மாடல் அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: எம்மதத்தையும் சாராத வரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல். ஆளுநர் அர்லேகர் இச்செயலுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: திருவள்ளுவர் தமிழ்கூறும் நல் உலகின் குறியீடு. நீதி வரையறையின் குறியீடு. அதை வலது புறம் திருப்பும் முயற்சியில் ஆளுநர் ஈடுபடக்கூடாது. திருவள்ளுவருக்கு காவி உடை என்பது ஏற்புடையதல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு இருக்கிறது.
சட்டப்பேரவை இருக்கிறது. ஆளுநர்கள் அதன் மீது ஏறி அமர்வது ஜனநாயகத்துக்கு அழகல்ல. தமிழ் பண்பாடுகளையும், கலாச்சார கூறுகையும் ஆளுநர் மதிக்க வேண்டும்.
அதை வேறு திசையில் திருப்புவதை காலம் ஏற்காது. சரித்திரம் மண்ணிக்காது. மேலும், தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல் முருகன், தி.க.தலைவர் வீரமணி உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。