
























Updated on
:
1 min read
புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசி, தமிழகப் பகுதியில் இடம்பெற்று விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் பதவியேற்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி அரசு நலத்திட்டங்கள் தொடரும். மத்திய அரசுடனான உறவு நன்றாக உள்ளது. இது தொடரும். அமைச்சர் பதவிக்காக 100 கோடி ரூபாய் பேரம் யார் யாரிடம் பேசினார்கள் என்பதை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தால் அதை விசாரிக்கலாம். தமிழகத்தில் புதிதாக அமைந்த அரசுக்கு பாராட்டுகள்.
தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துக்கள் சிறந்த முறையில் விஜய் செயல்படுவார் என்ற நம்பிக்கையுள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்ற ஆனந்த்துக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது மகிழ்ச்சி. அனுபவமிக்க அவர் சிறப்பாக செயல்படுவார்.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசி தமிழகப் பகுதியில் இடம்பெற்று விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பிரதமர் மோடி கூறியபடி புதுச்சேரி ‘பெஸ்ட் புதுச்சேரி’ ஆக மாறி வருகிறது. அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த மாநிலமாக புதுச்சேரி திகழ்ந்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தி, அதை நிச்சயமாக பெறுவோம்.
பிரதமர் மனது வைத்து ஆளும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக அந்த நம்பிக்கை வெற்றி பெறும். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தபிறகு கட்சியில் யார் நிறுத்தப்படுவார் என்பது தெரியவரும் என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。