





















Updated on:
மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயில் போல், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் தரிசனத் துக்கு முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு அனுப்புவதை தடுக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையில் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. தரிசனத்துக்கு வரும் வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்களிடம் சிலர் கட்டண தரிசன முறை கேட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் திடீர் ஆய்வு செய்து கட்டண தரிசன முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதே போல, மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், திருச்செந்தூர் போன்று மீனாட்சி அம்மன் கோயிலிலும் கட்டண தரிசனத்தில் பக்தர்களை அனுமதிப்பதில் முறைகேடுகள் நடக்கின்றன.
கோயிலில் இடைத்தரகர்கள்
சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களிடம் டிக்கெட்டுக்கு கட்டணம் பெற்ற ஊழியர் ஒருவர், டிக்கெட் வழங்காமல் அங்குள்ள மற்றொரு ஊழியருடன் சேர்ந்துகொண்டு முறைகேடாக பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்பினர். இதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல, இடைத்தரகர்கள் சிலர், வெளிமாநில பக்தர்களிடம் தாங்கள் கோயில் ஊழியர்கள் எனக் கூறி ஏமாற்றுகின்றனர். கோயிலில் கூட்டமாக இருப்பதால், பணம் கொடுத்தால் விரைந்து தரிசனம் செய்யலாம் எனக் கூறி பல ஆயிரம் ரூபாய் வசூலித்து முறைகேடு செய்கின்றனர்.
இதை கோயில் ஊழியர்கள், போலீஸார் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஆய்வு செய்து இங்கு நடந்து வரும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத் தரப்பில் கூறுகையில், கோயிலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. தரிசனத்துக்கு அம்மன் சந்நிதி ரூ.50, இரு சந்நிதிகளுக்கு ரூ.100 மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக யாராவது கேட்டால் புகார் அளிக்கலாம், என்று கூறினர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。