





















பேருந்தில் மறதியாக விட்டுச்சென்ற மாணவரின் ஹால் டிக்கெட்டை மீட்டு பரமக்குடி பேருந்து நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள்.
Updated on
:
1 min read
பரமக்குடி: அரசுப் பேருந்தில் விட்டுச் சென்ற நீட் தேர்வுக்கான நுழைவுக்கூட அனுமதிச்சீட்டு வைத்திருந்த பைலை அதிகாரிகள் உதவியுடன் மாணவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசுக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கல்லூரி என இருதேர்வு மையங்களில் நேற்று நீட் தேர்வு நடந்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் உதயகுமார் பரமக்குடியில் நீட் தேர்வு எழுத அரசுப் பேருந்தில் சென்றார்.
அப்போது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்), ஆதார் அட்டை மற்றும் சான்றிதழ்கள் வைத்திருந்த பைலை மறந்துவிட்டு பரமக்குடியில் இறங்கினார்.
தேர்வு மையத்துக்கு வந்த பின்னர்தான் மாணவர் உதயகுமாருக்கு பேருந்தில் மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. இதுகுறித்து நீட் தேர்வு நடந்த பரமக்குடி அரசுக் கல்லூரிக்கு வெளியே நின்றிருந்த பத்திரிகையாளர்களிடம் விவரத்தைத் தெரிவித்து மாணவர் உதயகுமார் உதவி கேட்டார்.
பத்திரிக்கையாளர்கள் உடனடியாக பரமக்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தொடர்பு கொண்டனர். மாணவர் வந்த பேருந்து மானாமதுரை அருகே சென்று விட்டது தெரியவந்தது.
தொடர்ந்து, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து பரமக்குடி வழியாகச் செல்லும் மற்றொரு பேருந்து மூலம் பைலை பரமக்குடிக்கு அனுப்பினர்.
பின்னர் மாணவர் உதயகுமாரிடம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பைலை ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் நிம்மதியுடன் நீட் தேர்வை எழுதினார்.
தேர்வுக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் பத்திரிகையாளர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகள் உதவியுடன் நீட் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。