



























Updated on
:
1 min read
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் மூப்பக்கோவிலில், 500 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன ஆபரேஷன் சிந்தூர் நினைவுத் தூண் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதில், பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி, அங்கிருந்த தீவிரவாதிகளின் முகாம் மற்றும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் சிலவற்றை அழித்தது. இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று நினைவு கூரப்பட்டது.
இதற்கிடையே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்திய ராணுவத்தை கவுரவப்படுத்தும் வகையில், கடலூரில் இயங்கி வரும் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் வெல்பஃர் அசோசியேஷன் சார்பில் ஐம்பொன்னால் ஆன நினைவுத் தூண் வடிவமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, கும்பகோணம் வட்டம் மூப்பக்கோவிலில் ஸ்தபதி குமார் தலைமையிலான குழுவினர் ரூ.10 லட்சம் மதிப்பில் 500 கிலோ எடையில் 8 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன நினைவுத் தூண் வடிவமைக்கும் பணியை கடந்த 2 மாதங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நினைவுத் தூணின் அடித்தளம் 2 அடி விட்டமும், ஒன்றரை அடி அகலமும், அதன் மேல் ஒரு அடி பத்மமும் கொண்டதாக இருக்கும். அதற்கு மேல் மையத்தூண் 2 அடியிலும், குங்குமச் சிமிழ் இரண்டரை அடியிலும், தலைப்பாகத்தில் குங்குமம் வர்ணம் ஒரு அடியிலும் அமைக்கப்படுகிறது. மையத்தூணில் முப்படைகளின் இலச்சினைகள் பொருத்தப்படும்.
ராணுவத்தில் ஒப்படைக்கப்படும்: இப்பணிகள் நிறைவடைந்த பிறகு பிரத்யேக வாகனத்தின் மூலமாக டெல்லிக்கு கொண்டு சென்று இந்திய ராணுவ தலைமையகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கடலூர் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் வெல்பஃர் அசோசியேஷன் தொண்டு நிறுவனத் தலைவர் மில்ட்ரி பாபு, ஆலோசகர் சத்தியநாராயணன், ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் படைவீரர்கள் நலச் சங்கத்தினர் செய்து வருகின்றனர். முன்னதாக, முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று மாதிரி தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。