












Updated on
:
1 min read
புதுடெல்லி: மத்திய அரசுப் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி வாயிலாக பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ‘ரோஜ்கர் மேளா' திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்று, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களை பெற்றுள்ள இவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காளிகளாக மாறுகிறார்கள். ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இந்த இளைஞர்கள் புதிய பொறுப்புகளை ஏற்கவுள்ளனர். வரும் ஆண்டுகளில், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் நீங்கள் அனைவரும் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறீர்கள். இந்த சாதனைக்காக உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.
நாடு முழுவதும் நேற்று 47 இடங்களில் இந்த ரோஜ்கர் மேளா நடைபெற்றது. ரோஜ்கர் மேளா தொடங்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் இதுவரை சுமார் 12 லட்சம் பேருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。