











அனிதா ராதாகிருஷ்ணன் | கோப்புப்படம்
Updated on
:
1 min read
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது விசாரணை நடத்த அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.77 கோடி சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து கண்டறிய 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 18 சொத்துகளையும், பின்னர் சென்னை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள ரூ.1.21 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது.
கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதும், அது இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்போது அமைச்சர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசின் அனுமதி தேவை என்பதால், விசாரணைக்கு அனுமதி கோரி அமலாக்கத் துறை கடந்த 20-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 'பிரசாத் ஆச்சாரியா' வழக்கின் தீர்ப்பையும் இதில் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், 5 நாட்களுக்கு பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், “கடிதம் கிடைத்த 120 நாட்களுக்குள் மாநில அரசு, விசாரணைக்கு அனுமதி தரவேண்டும், தவறும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு கடிதங்களும் பெறப்பட்டதை அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 120 நாட்களுக்குள் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。