










பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
Updated on
:
1 min read
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று சீனா சென்றுள்ளார்.
சீனாவுடனான உறவை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டு விழாவில் பங்கேற்கவும் ஷெபாஸ் ஷெரீப் சீனா சென்றுள்ளார். அவர் தனது 4 நாள் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று சீனாவின் ஹாங்சோ நகரை சென்றடைந்தார்.
அங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெஜியாங் மாகாண செயலாளரை பிரதமர் ஷெபாஸ் சந்திக்கிறார். மேலும், சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (சிபெக்) 2-ம் கட்டத்தின் கீழ் இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் வணிக மன்றக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார். கூடுதலாக, முக்கிய சீன நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை ஷெபாஸ் சந்தித்துப் பேசுகிறார்.
இதையடுத்து பெய்ஜிங் நகருக்கு ஷெபாஸ் ஷெரீப் செல்கிறார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாகிஸ்தான் - சீனா தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
மேலும் சீனாவின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துவார். அத்துடன், சீன வேளாண் அறிவியல் அகாடமிக்கும் ஷெபாஸ் ஷெரீப் நேரில் செல்லவுள்ளார்.
ஷெபாஸ் ஷெரீபின் இந்தப் பயணம் பாகிஸ்தான் - சீனா உறவுகளில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。