






















திரிணமூல் எம்.பி. சயோனி கோஷ்
Updated on
:
1 min read
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சயோனி கோஷின் தலைக்கு, உ.பி. பாஜக நகராட்சி தலைவர் ரூ.1.கோடி பரிசு அறிவித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
சிவலிங்கம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சயோனி சமூக ஊடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.
இதற்கு விளக்கம் அளித்திருந்த சயோனி கோஷ், தனது சமூக ஊடக கணக்கு ஹேக் செய்யப்பட்டு, தவறான கருத்து வெளியிடப்பட்டதாகவும், சர்ச்சைக்குரிய அந்த கருத்து உடனே நீக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரம் அத்துடன் முடிவடையவில்லை.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, சயோனி கோஷின் கருத்து சமூக ஊடகத்தில் மீண்டும் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உ.பி. புலந்த்சாகர் மாவட்டத்தின் சிகந்திரபாத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக நகராட்சி தலைவர் பிரதீப் தீக்சித் கூறுகையில், ‘‘சயோனி கோஷின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும்’’ என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சயோனி கோஷ் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஆகியோரை இணைத்து வெளியிட்ட பதிவில், “தேர்தலின்போது பெண்களின் பாதுகாப்பை மிகப் பெரிய விஷயமாக பாஜக பேசியது.
ஆனால் தற்போது மக்கள் பிரதிநிதி ஒருவருக்கே பாஜக தலைவர் வெளிப் படையாக அச்சுறுத்தல் விடுக்கிறார். இதுதான் மத்திய அரசின் பெண்கள் மேம்பாட்டு கொள்கையா ? பிரதீப் தீக்சித் மீது கொல்கத்தா மற்றும் உ.பி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
ஆனால், இது குறித்து பீரதீப் தீக்சித் கூறும்போது, "நான் மிரட்டல் ஏதும் விடுக்கவில்லை. இந்த வீடியோ ஏஐ மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。