


























Updated on:
சென்னை: “எங்களுடைய கூட்டணியை தவிர்த்து வேறு யாரிடமும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், தவெக அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து இருந்தோம். சட்டப்பேரவை கட்சி தலைவர் தேர்வை முறையாக சபாநாயகருக்கு தெரிவித்தோம். கொறடா உத்தரவை மீறி சட்டத்துக்குப் புறம்பாக தவெக அரசுக்கு வாக்களித்துள்ளனர்.
ஜெயலலிதா புகழ் சொல்லிதான் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றோம். அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாமல் துரோகம் விளைவிக்கிறார்கள் சில முன்னாள் அமைச்சர்கள்.
தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இது அதிமுகவுக்கு மட்டும் நடந்தது இல்லை. சில முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டு அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தவறாக வழிநடத்துகிறார்கள்.
தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும் முதல்வர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடும் நிலவும்போது ஒரு தரப்பினரை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்? இது தான் தூய்மையா?
எல்லா இயக்கங்களுக்கும் சோதனைவரும், பிரிவு வரும். ஆனால், எந்த தலைவரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்கு சென்றது இல்லை. ஆரம்பத்திலேயே தவறான பாதைக்கு செல்கிறார் தவெக விஜய். இது போன்ற விஷயங்கள் வருத்தமளிக்கிறது.
அதிமுக வலிமையான இயக்கம். அதிகமான தொண்டர்களை கொண்ட இயக்கம். எனது பிரச்சாரங்களில் யாரை தாக்கிப் பேசி இருந்தோம் என நீங்களே பார்த்தீர்கள். அதிமுக தோன்றியதே எதிர்ப்பில் தான். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி இப்படி செய்வோம்; வேறு எந்த விஷயத்தையும் அவர்களால் பேச முடியவில்லை.
அதனால் இதுபோன்ற காரணத்தை சொல்லி மக்கள், நிர்வாகிகளிடத்தில் ஒரு தவறான விஷயத்தை சொல்லி வருகிறார்கள். அதோடு தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையில் இப்படி சொல்கிறார்கள்.
அதிமுக, எங்களுடைய கூட்டணியை தவிர்த்து வேறு யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்று பழனிசாமி தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。