

























Updated on:
தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். அப்போது, தேர்தல் பணிகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்திலேயே முகாமிட்டு தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருவது, இத்தேர்தலில் பாஜக காட்டும் தீவிரத்தை உணர்த்துகிறது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வந்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 15-ம் தேதி நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்துகிறார். 18-ம் தேதி கோவையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரும் தமிழகம் வரவுள்ளனர். இது கூட்டணித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இன்று (13-ம் தேதி) மாலை 4 மணிக்கு, தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்துரையாடுகிறார். ‘எனது பூத் - வலிமையான பூத்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 5 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பதிவில், “திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 13-ம் தேதி மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。