























Updated on:
பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவன பெண் மேலாளர் ஒருவர், தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
கேரளாவை பூர்விகமாகக் கொண்ட பெண் தொழிலதிபர் நெஸ்ரின் மித்லாஜ். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை மையமாகக் கொண்டு அவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
அண்மையில் கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு சென்ற அவர் ஒரு ஆட்டோவில் பயணம் செய்தார். ஆட்டோவை ஓட்டிய இளம்பெண்ணின் நடை, உடை பாவனை, தெளிவான ஆங்கில உச்சரிப்பை பார்த்து வியந்த தொழிலதிபர் மித்லாஜ், அந்த பெண்ணை குறித்து விசாரித்தார்.
அப்போது பெங்களூருவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் 9 ஆண்டுகள் அந்த பெண் மேலாளராகப் பணியாற்றி இருப்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்தார். ஐடி துறையின் பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக மேலாளர் பதவியை ராஜினாமா செய்த அந்த பெண், தற்போது சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இது குறித்து தொழிலதிபர் நெஸ்ரின் மித்லாஜ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை சந்தித்தேன். அழகான சீருடையில் இருந்த அவர் தன்னம்பிக்கை, மனநிறைவோடு வாழ்கிறார். பொதுவாக ஆண்களே ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றுவார்கள். இந்த துறையில் நீங்கள் நுழைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அந்த பெண் அளித்த பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“9 ஆண்டுகள் ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றினேன். அழுத்தம், மனஉளைச்சல், பதற்றமான மனநிலை காரணமாக அந்தப் பணியை துறந்துவிட்டேன்’’ என்று பெண் ஆட்டோ ஓட்டுநர் கூறினார்.
தற்போது அவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார். மாதம் சுமார் ரூ.60,000 ஊதியம் ஈட்டுகிறார். இந்த பணியில் அவர் மகிழ்ச்சியாக வாழ்கிறார். கவுரவத்தைவிட மன அமைதியே முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。