























Updated on:
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்திருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த மே 13-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
அது நிலுவையில் இருந்தபோது, மே 25-ம் தேதி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோரும், மே 26-ம் தேதி இசக்கி சுப்பையாவும் (அம்பாசமுத்திரம்) பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
அரசியல் லாப நோக்குடன் 4 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளதால், இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது. அதனால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். கட்சி மாறிய 4 பேரும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வெறும் யூகம், சந்தேகத்தின் அடிப்படையில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குதிரை பேரம் நடந்துள்ளதாக மனுதாரரின் நம்பிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது.
குற்றத்துக்கான ஆரம்ப கட்ட முகாந்திரம் இருப்பதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும். 4 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து கட்சி மாறியதன் காரணத்தால் இதை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், குற்றமுறு தவறான நடத்தை என கூற முடியாது. எனவே, சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。