










Updated on:
சென்னை: ‘பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறார் முதல்வர் விஜய். விவசாயிகளின் உரிமைகளை புறம்தள்ளி, அவர்களை ஏமாற்ற வேண்டாம்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் ஜோசப் விஜய், தமிழக விவசாயிகளுக்கு அறிவித்திருந்த விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை, முறையாக, நிறைவாக நிறைவேற்றவில்லை என்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள், சாலை மறியல் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
கடந்த தேர்தலில், விவசாய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் கூறியிருந்தார். ஆனால், ரூ.50,000 மதிப்புள்ள பயிர்க் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றுகிற வித்தை ஆகும்.
"5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளை ஏமாற்றிவிட்டது த.வெ.க அரசு.
அதுமட்டுமல்லாமல் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு முரணாக, 500 யூனிட்டுக்கு மேல் இலவச மின்சாரம் கிடையாது என்று நிபந்தனை இட்டிருப்பது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.
இனியும் தாமதப் படுத்தாமல், த.வெ.க அரசு, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3500-ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4500-ம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஊக்கத்தொகையாக விவசாய இடுபொருட்கள், விதைகள், உரங்கள் ஆகியவை விவசாயிகள் பாதிக்கப்படாத அளவில் விலைநிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
நீர்நிலைகளை பாதுகாக்க குடிமராமத்து திட்டங்களும் வேகப்படுத்த வேண்டும். மேலும், வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களுடைய விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அனுமதியிருந்தாலும், ஆங்காங்கு வருவாய்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள், வண்டல் மண்ணை எடுத்துச்செல்லும் விவசாயிகளின் மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்துவதால் விவசாயப் பெருமக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகிறார்கள்.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர், கடன் தள்ளுபடி செய்யும்போது, எந்தவித பாரபட்சம் இல்லாமல், விவசாயிகளின் நலன் ஒன்றையே மனதில் வைத்து அவர்களது கடன் சுமையை குறைத்தார்கள். இதர தொழில்களான கறவை மாடுகள் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்கள், வேளாண்மை இயந்திரக் கடன்கள், வேளாண்மை நகை கடன்கள், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் உட்பட அனைத்துவிதமான விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்தனர்.
தேர்தல் காலத்தில் ஜோசப் விஜய், "நான் விவசாயி அல்ல; இருப்பினும், விவசாயிகளின் ரணத்தை அறிந்தவன்" என்று பேசிவிட்டு, தற்பொழுது ஏமாற்றும் வகையில் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்திருப்பது, நியாயம் இல்லாத கண்துடைப்பான நடவடிக்கை ஆகும்.
தேர்தல் வாக்குறுதி பொய்யாகி போய்விட்டது. விவசாயிகளை ஏமாற்றி, கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய்யை நோக்கி விவசாயிகளின் போராட்டம் நிச்சயமாக இருக்கும். விவசாயிகளின் போராட்டமானது அணையாமல் கனன்று கொண்டிருக்கும் நெருப்பைப் போன்றதாகும்.
1970 -லிருந்து 1992 வரை தமிழக விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் 57 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளனர் என்ற வரலாற்றுச் சம்பவத்தை ஜோசப் விஜய் உணரவேண்டும். தமிழக விவசாயிகள் போராட்டம், என்பது விவசாயிகளின் அறச்சீற்றம். இதை த.வெ.க அரசு தவறாக எடை போட வேண்டாம்.
"உழவன் உயர்ந்தால் உலகம் உயரும்" என்ற உணர்வோடு தமிழக மக்களின் பட்டினியை போக்கும் நடவடிக்கையை த.வெ.க அரசு எடுக்க வேண்டும். அறன்சார்ந்த வேளாண்தொழிலை புறக்கணிக்கும் முதல்வர் ஜோசப்விஜய், விவசாயிகளின் உரிமைகளையும் புறம்தள்ளி, அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。