

























நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்
Updated on:
சென்னை: “அமைச்சர் ஆனந்த் கலந்துகொண்ட திருவொற்றியூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்திய அநாகரிகமான செயல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை விம்கோ நகரில் தவெக அமைச்சர் ஆனந்த் கலந்துகொண்ட, திருவொற்றியூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்திய அநாகரிகமான செயல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
சமூகத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் எளிய மனிதர்களை இத்தகைய இழிவான முறையில் நடத்தியிருப்பது, அவர்களின் கண்ணியத்தை முற்றிலும் சிதைக்கும் மனிதநேயமற்ற செயலாகும்; இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேடைகளில் சமத்துவம், சமூகநீதி மற்றும் தொழிலாளர் நலன் குறித்துப் பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், தன் கட்சியின் பின்னணியில் நிகழ்ந்துள்ள இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?. எளிய மக்களின் உழைப்பையும் சுயமரியாதையையும் மதிக்காத இவர்களின் செயல், இவர்கள் பேசும் கொள்கைகள் அனைத்தும் வெறும் வெற்று முழக்கங்கள் தான் என்பதைக் காட்டுகிறது.
எனவே, இந்த அவலச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தவெக தலைவர் முதல்வர் விஜய் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்கள் மத்தியில் வெற்று அரசியல் பேசாமல், தங்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதலில் மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。