























Updated on
:
2 min read
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி சரியான திசையில் சென்றிருந்தால் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 எம்பிக்கள் கட்சியை விட்டு விலகி இருக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அஹில்யா நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, “ஜனநாயகத்தில் அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை ஒவ்வொரு நபருக்கும் உண்டு. அவர்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்து கட்சித் தலைமை (அரவிந்த் கேஜ்ரிவால்) ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அவர்கள் ஏதோ சிரமத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
கட்சித் தலைமையின் தவறுதான் இதற்குக் காரணம். கட்சி சரியான திசையில் சென்றிருந்தால் அவர்கள் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டார்கள். கட்சியை விட்டு விலகும் அவர்களின் முடிவுக்குப் பின்னால் உள்ளார்ந்த காரணங்கள் இருக்கும்.
அந்தக் காரணங்களை பரந்த ஜனநாயக சூழலின் பின்னணியில் பார்க்க வேண்டும். எங்கிருந்து வெளியேற வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு” என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2011ம் ஆண்டில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான இயக்கத்தின்போது அன்னா ஹசாரேவும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டனர். டெல்லியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்களில் ஹசாரேவுடன் கேஜ்ரிவால் இணைந்து செயல்பட்டார். எனினும், கேஜ்ரிவாலின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிய அன்னா ஹசாரே, தொடர்ந்து அவரை விமர்சித்து வருகிறார்.
பின்னணி என்ன?
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்தனர்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா, “ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களில் மூன்றில் 2 பங்கினர் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளோம். என்னுடன் சேர்ந்து ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி என மொத்தம் 7 எம்.பி.க்கள் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி உள்ளோம்.
எனது வாழ்வின் 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தேன். ஆனால், நேர்மையான அரசியலை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது அந்த பாதையில் இருந்து விலகிவிட்டது.
நியாயமான மனிதனாகிய நான் தவறான, நேர்மை இல்லாத ஒரு கட்சியில் இருந்ததை இப்போது உணர்கிறேன். எனவே, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி மக்களுக்காகப் பணியாற்ற முடிவெடுத்துள்ளேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன் இனிப்பு வழங்கி வரவேற்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。