

























Updated on:
சென்னை: தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (மே 16) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, வெள்ளிக்கிழமை பகலில் அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 16) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 17-ம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மே 16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 19-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதுபோல அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மே 19-ம் தேதி பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。