

























Updated on
:
1 min read
தமிழக பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மத உணர்வை தூண்டும் பகுதிகளை நீக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா அரசியலை ஏற்று செயல்படும் பாஜக, தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த தொடர்ந்து முயன்று வருகிறது. மக்களின் இயல்பான ஆன்மீக நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் மதவெறி அரசியலுக்கு அணிதிரட்டி, மாநில அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாஜக, அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலையை தற்போது குறி வைத்துள்ளது.
சமூக அமைதியும், மத நல்லிணக்க சூழலும் நிலவி வரும் தமிழகத்தில், வாக்கு வங்கி அரசியலுக்காக பெரும்பான்மை மதவெறி அரசியலை தீவிரமாக முன்னெடுக்கும் பாஜக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சினையை முன்னிறுத்தி தேர்தல் அறிக்கையை தயார் செய்து வெளியிட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயன்ற பாஜக, அதை தேர்தல் அறிக்கையிலும் முன் வைத்திருக்கிறது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், மதத்தையும், மத உணர்வுகளையும் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தக் கூடாது என்கிற மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக திருப்பரங்குன்றம் விவகாரத்தை தேர்த்ல் அறிக்கையில் பாஜக வைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியத் தேர்தல் ஆணையம், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மத உணர்வுகளை தூண்டும் பகுதிகளை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。