

















விருதுநகர் பேராலி சாலையில் மாவட்ட நிர்வாகம் வழங்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி. (உள்படம்) புஷ்பராஜ்
Updated on
:
1 min read
விருதுநகர்: விருதுநகரை பசுமையாக மாற்ற பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் சேவையை ஆலமரம் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. மரக்கன்றுகளை உருவாக்கி ‘நர்சரி’ அமைக்க, இந்த அமைப்புக்கு மாவட்ட நிர்வாகம் இலவசமாக நிலம் ஒதுக்கி ஊக்கப்படுத்தியுள்ளது.
விருதுநகரை பசுமைப் பகுதியாக மாற்ற, மரக்கன்றுகள் நட்டுவைத்துப் பராமரிக்க தன்னார்வலர்களால் 2020-ல் ஆலமரம் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆலமரம் அமைப்பு மூலம், இம்மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மரக்கன்றுகளை நட்டு வைக்கின்றனர். மற்றொரு குழுவினர் ஏற்கெனவே நட்டு வைத்த மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி, தாதம்பட்டி, வில்லிப் பத்திரி ஆகிய கிராமங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதோடு, அரசு மருத்துவமனை வளாகம், அரசுப் பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
முன்பு பல்வேறு தன்னார்வ அமைப்புகளையும், அரசு மற்றும் தனியார் நர்சரிகளையும் அணுகி மரக்கன்றுகளைப் பெற்று வந்தனர். ஆலமரம் அமைப்பின் செயல்பாடுகளை அறிந்து, அவர்கள் நர்சரி அமைக்க பேராலி சாலையில் ஓடைப் புறம்போக்கு பகுதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
தற்போது 200 மீ.க்கு நர்சரி அமைத்து 2 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆலமரம் அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் கூறுகையில், "ஓடை புறம்போக்குப் பகுதியில் 1,000 மீட்டர் தூரத்துக்கு எங்களுக்கு நிலம் ஒதுக்கிய மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி.
மரக்கன்றுகளை பிறரிடமிருந்து வாங்கும் சிரமத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நாங்களே சொந்தமாக மரக் கன்றுகளை விதை நடவு மூலம் உற்பத்தி செய்கிறோம்.
இதன்மூலம் தேவைப்படும் பகுதிகளில் நாங்களே மரக்கன்றுகளை நட்டு வைக்க வசதியாக உள்ளது. தற்போது ஓடை கரையோரம் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறோம்" என்று கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。