
































Updated on
:
1 min read
பழநி: “தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்த காரணம் திமுக அரசின் மீதான மக்களின் கோபமும், ஆதங்கமும் தான்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மத்திய இணை அமைச்சரும், அவினாசி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் வெள்ளிக்கிழமை (ஏப்.24) மாலை சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் தேர்தல் ஜனநாயக முறையில் அமைதியாக நடந்துள்ளது. தோல்வி பயத்தில் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அவினாசி தொகுதியில் எனது வெற்றி 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்த காரணம் திமுக அரசின் மீதான மக்களின் கோபமும், ஆதங்கமுமே ஆகும். மக்கள் திமுக அரசு மீது வெறியாக இருந்ததால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளது.
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் 2047 'விக்ஷித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) கனவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் தான் பலரும் பாஜகவை நோக்கி வருகின்றனர். திராவிட மாடல் 2.0 இல்லை. அது வெறும் ஜீரோ தான். திமுக அரசை தூக்கு எறிய மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பழநி கோயிலில் தரிசனம் செய்த பிறகு, அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார். தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் பழநியில் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。