























Updated on:
மதுரை: நிரபராதிகள் அநியாயமாகத் தண்டிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதில் குற்றவியல் நீதி அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியில் மோசடி செய்து, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கார்த்திகேயன், அமலரசு, முரளி ஆகியோர் மீது 2016-ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், தேனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி அமலரசு, முரளி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இதை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், ‘விசாரணை நீதிமன்றத்தில் இரு ஆவணங்களை தாக்கல் செய்யக் கேட்டு மனு செய்தோம். அந்த ஆவணங்களில் நாங்கள் மேற்பார்வை சார்ந்த குறைபாடுகளுக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் என்றும், முறைகேட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெளிவாக உள்ளன. இருப்பினும், அந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’ எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒரு வழக்கில் நியாயமான தீர்ப்புக்கு கூடுதல் சான்றுகள் தேவை எனக் கருதினால், அவற்றை ஏற்க மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 391 அதிகாரம் அளிக்கிறது. இப்பிரிவு நீதி மறுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. இதை குறுகிய அல்லது வெறும் சட்ட நுணுக்கங்கள் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது.
குற்றவியல் நடவடிக்கைகளுக்கும், துறைசார் நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. துறைசார் நடவடிக்கைகளின் முடிவுகள் குற்றவியல் நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது. இருப்பினும், துறைசார் நடவடிக்கையின்போது பெறப்பட்ட ஆவணங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் பங்கு மற்றும் குற்றத்தன்மையை நிர்ணயிப்பதில் சாட்சியத்தின் மதிப்பைக் கொண்டிருக்கக்கூடும்.
குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக்கூடிய சாத்தியமுள்ள சாட்சியங்கள் இருக்கும்போது, தொடர்புடைய மற்றும் முக்கியமான அனைத்து சாட்சியங்களும் நீதிமன்றப் பதிவில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வது, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கடமையாகும்.
நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யவும், நீதி தவறுவதைத் தவிர்க்கவும் மட்டுமே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 391-ன் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில், குறிப்பிட்ட ஆவணங்களைக் கருத்தில் கொள்ளாதது நீதி தவறுவதற்கு வழிவகுக்கக்கூடும்.
எந்தவொரு நிரபராதியும் அநியாயமாகத் தண்டிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதில், குற்றவியல் நீதி அமைப்பு கவனம் செலுத்த வேண்டும். இதனால், தேனி முதன்மை அமர்வு நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。