

























Updated on:
புதுடெல்லி: லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் கருவிகளாக வினாத்தாள் கசிவு, தேர்வு நிர்வாகக் குளறுபடிகள், ரத்து செய்யப்படும் பணி நியமனங்கள், விண்ணை முட்டும் கட்டண உயர்வு போன்றவை உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர் மாநாடுகளை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதன்முதல் மாநாடு ராஜஸ்தானின் கோட்டா நகரில் நாளை நடைபெற உள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாணவர்கள், இளைஞர்களுக்கான அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தேர்வு மோசடியால் பாதிக்கப்படும் பலரும் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
இதை ஒட்டி, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என் மனதில் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. அதை நீங்களும் உங்கள் இதயத்தில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. ஆனால், பொறுப்புணர்வு மற்றும் நேர்மை ஆகிய இரண்டுமே மோடி அரசின் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை.
வினாத்தாள் கசிவு, தேர்வு நிர்வாகக் குளறுபடிகள், பணி நியமன ரத்து, விண்ணை முட்டும் கட்டண உயர்வு, தனியார்மயமாக்கல், ஊழல் முறைகேடுகள் ஆகியவற்றைத்தான் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைக்கும் கருவிகளாக இந்த அரசு பயன்படுத்தி வருகிறது.
நினைவில் கொள்ளுங்கள், இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். இதைத்தான் நான் உங்கள் அனைவரிடமும் விரிவாகக் கூற விரும்பினேன். அதனால்தான் நான் உங்களுக்கு ஒரு அழைப்பு விடுக்கிறேன். நாட்டின் ஒவ்வொரு தெருவில் இருந்தும், ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் எழும் மாணவர்களின் குரலை கோட்டாவில் ஒரு பெரும் போராட்ட முழக்கமாக மாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
கோட்டா மாநாட்டைத் தொடர்ந்து அலகாபாத் (ஜூலை 10), பாட்னா (ஜூலை 11), டெல்லி (ஜூலை 14) ஆகிய மாநகரங்களிலும் இதேபோன்ற மாநாடுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。