



























Updated on:
சென்னை: ஊத்துக்கோட்டை அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இன்று (21.06.2026) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் இருந்த 64 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் விஜய், “இச்சம்பவத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தது குறித்த துயர செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவர்களது உடலினை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கு அரசு செலவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் (ESI) திட்டம் / வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இனிவருங்காலங்களில், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, பேரபாய தொழிற்சாலைகளை (Hazardous Industries) உடனடியாக குழு ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
விபத்து குறித்து இயக்குநர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, கூடுதல் இயக்குநர் பொது சுகாதார துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர்-செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு முதற்கட்ட விசாரணை அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விசாரணை அறிக்கையினை 3 நாட்களுக்குள்ளாகவும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் /மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இணைந்து நேரடியாக ஆய்வு செய்து தக்க மேல்நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவியினை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。