


























மனைவியுடன் வாக்களித்த மு.க.அழகிரி
Updated on
:
1 min read
மதுரை: தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்ற நிருபர்களின் கேள்விக்கு, “நான்தான் அன்றைக்கே சொல்லிவிட்டேனே, யார் வேண்டுமென்றாலும், எப்படிவேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம்’’ என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி புதிர்போல் பதில் அளித்தது கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த முதல்வர் கருணாநிதி மகனுமான மு.க.அழகிரி, இன்று டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி காந்தி வந்திருந்தார். வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள், கேள்விகளை முன் வைத்தனர்.
வாக்களிப்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்ற கேள்விக்கு, ‘‘வாக்களித்த எல்லோரும் என் ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன் என்று சொல்லப்போகிறார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன்.” என்றார்.
தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “தேர்தல் கொஞ்சம் சூடாக இருக்கிறது. வெளியே வெயிலாக, சூடாக இருக்கிறது,’’ என்றார். எல்லோரும் அவரது இந்தப் பதிலுக்கு சிரித்தனர்.
தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், ‘‘தெரியவில்லை, நான்தான் அன்றைக்கே சொல்லிவிட்டேனே, யார் வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம் என்று. ஒன்றும் புரியவில்லை. என்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். அவ்வளவுதான்,’’ என்றார்.
திமுகவில் தன் ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னை இன்னும் சேர்த்துக் கொள்ளாததால் மு.க.அழகிரி வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதை முக.அழகிரியின் மகள் கயல்விழி, சமீபத்தில் ஒரு பேட்டியில், மிக வெளிப்படையாகவே தெரிவித்தோடு “ராமனுக்கே 14 வருஷம்தான் வனவாசம், எங்க அப்பாவை ஓரங்கட்டி 15 வருஷம் ஆகிவிட்டது” என தன்னுடைய சித்தப்பா முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய தந்தையை திமுகவில் சேர்த்துக் கொள்ளாதது பற்றி வருத்தமாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。