























Updated on
:
1 min read
சென்னை: “திமுக, தவெகவுக்கு தங்களின் கொள்கையில் உண்மையான துணிச்சல் இருந்திருந்தால், சனாதன இந்து தர்மத்தை குறிவைப்பதே தங்களின் அரசியலின் மையக் கருத்து என்று அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களின்போதே பகிரங்கமாக அறிவித்திருக்க வேண்டும்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் சனாதன இந்து தர்மத்தை ஒழிப்பதைப் பற்றிப் பேசிய சில நாட்களிலேயே, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளுக்கு ஆதரவாக வந்துள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ நமக்கு உதவும் ஒரு நித்திய தர்மத்தின் மீது அவர்கள் தங்கள் மனதில் கொண்டுள்ள வெறுப்பின் அளவையும் இது காட்டுகிறது.
திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும், தங்களின் மிகக் குறுகிய கால வரலாற்றிலேயே, தாங்கள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளன. சனாதன இந்து தர்மத்தின் மீதான தங்களின் தொடர்ச்சியான தாக்குதல் தங்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதை திமுக மறந்துவிட்டது. தவெகவும் விரைவில் அதை உணரும்.
திமுக அல்லது தவெக ஆகிய இரு தரப்புக்குமே தங்களின் கொள்கையில் உண்மையான துணிச்சல் இருந்திருந்தால், சனாதன இந்து தர்மத்தை குறிவைப்பதே தங்களின் அரசியலின் மையக்கருத்து என்று அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போதே பகிரங்கமாக அறிவித்திருக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக, அவர்கள் மதச்சார்பின்மை மற்றும் நாடகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, யாரிடம் வாக்கு கேட்டார்களோ, அதே மக்களின் நம்பிக்கையை இப்போது ஆணவத்துடனும் துணிச்சலுடனும் அவமதிக்கும் வகையில் தங்கள் உண்மையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்... சனாதன இந்து தர்மம் விளையாட்டுப் பொருளல்ல. எனவே, அவர்களின் இத்தகைய கருத்துகள் நம் மக்களால் தண்டிக்கப்படாமல் போகாது என்று நான் மனதார நம்புகிறேன்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்தக் கருத்தை ஆதரிக்கும் வகையில், செய்தியாளர்களிடம் மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா கூறும்போது, “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் களத்தில் இறங்கியிருக்கிறோம்” என்று தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。