























Updated on:
சென்னை: மனைவியின் தவறான நடத்தையால் ஏற்பட்ட வேதனையில், மகளை கொலை செய்துவிட்டு நேபாள காவலாளி தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் நேபாள நாட்டைச் சேர்ந்த லட்சுமணன் பிரசாத் (40) காவலாளியாகப் பணியாற்றி வந்தார். அவர் மனைவி, 2 மகள்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள அறை ஒன்றிலேயே வசித்து வந்தார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதியும் இதேபோல் தகராறு ஏற்பட்டதால், கோபம் அடைந்த மனைவி இளைய மகளை அழைத்துக் கொண்டு வெளியேறினார். கடந்த 10 நாட்களாக மூத்த மகளான கீதாவுடன் (9) லட்சுமணன் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கீதாவை கழுத்தை நெறித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். தொடர்ந்து அதே கயிற்றின் மற்றொரு முனையில் தானும் தூக்கிட்டுக்கொண்டார்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து சென்று கீதாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அதே மருத்துவமனைக்கு லட்சுமணனையும் அனுப்பினர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
முதல் கட்டமாக லட்சுமணனின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் தனது கணவர் வீடியோ காலில் பேசியபடி மூத்த மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
போலீஸ் இதுகுறித்து கூறும்போது, ``லட்சுமணனின் மனைவி நுங்கம்பாக்கத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கும் அங்கு தண்ணீர் கேன் போடும் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது.
இதையறிந்த லட்சுமணன் மனைவியைக் கண்டித்ததால், அவர் கோபித்துக்கொண்டு மகள்களை அழைத்துக் கொண்டு வெளியேற முயன்றபோது, தடுத்ததால் ஒரு மகளை மட்டும் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
அவர் நேபாளம் செல்லாமல் அவரது ஆண் நண்பருடன் நுங்கம்பாக்கத்திலேயே இருப்பதை அறிந்த வேதனையில் லட்சுமணன் இவ்வாறு செய்துள்ளார் என்று போலீஸார் கூறினர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。