






















Updated on:
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீட்டில் மத அடிப்படையிலான உள் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி எம்.பி தர்மேந்தர் யாதவ், ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு தேவை’ என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத அடிப்படையிலான எந்த ஓர் இடஒதுக்கீடும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது. எந்தவொரு மதத்தின் அடிப்படையிலும் இடஒதுக்கீட்டை நமது அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை” என தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், “நாட்டின் பாதி மக்களுக்கு ஒட்டுமொத்த நாடும் இடஒதுக்கீடு கோருகிறது. முஸ்லிம் பெண்கள் இந்தப் பிரிவில் வரவில்லையா என்பதை நான் அறிய விரும்புகிறேன்? மக்கள் தொகையின் பாதியளவில் முஸ்லிம் பெண்கள் இல்லையா? மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதை இந்த அவையின் மூலம் நாட்டு மக்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது வீடுகளுக்கான கணக்கெடுப்புதான் நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் சாதிப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பாக இருக்கும்.
வீடுகளுக்கு சாதி கிடையாது. சமாஜ்வாதி கட்சி நினைத்திருந்தால், வீடுகளுக்கும் அது சாதியை நிர்ணயித்திருக்கும்” என கூறினார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, “தனிநபர்கள், குடிமக்களின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்போது அதில் சாதிக்கான ஒரு பத்தியும் சேர்க்கப்படும். இந்தக் கணக்கெடுப்பு, சாதி கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று இந்த அவைக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்” எனத் தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து மீண்டும் கேள்வி எழுப்பிய எம்பி அகிலேஷ், “மக்கள் தொகையில் பாதியளவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது. முஸ்லிம் பெண்கள் இந்தக் வகையின் கீழ் வரமாட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அகிலேஷின் இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, “தேர்தலின் போது தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் முஸ்லிம் பெண்களுக்கே சமாஜ்வாதி கட்சி வழங்கினால், அதற்கு நாங்கள் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்க மாட்டோம்” என்று கூறினார்.
நாடாளுமன்ற அவை துவங்குவதற்கு முன்பாக மறைந்த பாலிவுட் பாடகர் ஆஷா போன்ஸலே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்களான சிபிஐயின் அபு ஹாசீம் கான் சவுத்ரி மற்றும் காங்கிரஸின் மோசீனா கித்வாய் ஆகியோருக்கும் அஞ்சலில் செலுத்தப்பட்டது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。