



























Updated on
:
2 min read
சென்னை: முதல்வர் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார். முதல்வர் விஜய்க்கு காவல், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித் துறையும் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று நடிகர் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக விஜய் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்பின்னர் சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து மே 11-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் உட்பட 233 எம்எல்ஏ.க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு பேரவைத் தற்காலிக தலைவர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 17-வது சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் மே 12-ம் தேதி பொறுப்பேற்றனர்.
அதைத் தொடர்ந்து முதல்வர் விஜய், தனது பெரும்பான்மையை நிருபிப்பதற்கான நம்பிக்கை தீர்மானத்தை சட்டப்பேரவையில் மே 13-ம் தேதி கொண்டு வந்தார். அதற்கான வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக 144 எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். அப்போது அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு வழங்கினர். தங்கள் ஆட்சிக்கான பெரும்பான்மையை நிருபித்த பின்னர் தவெகவினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே முதல்வர் உட்பட 10 அமைச்சர்கள் பதவியேற்றாலும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தன. அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள் வழங்கப்பட உள்ளன. தவிர அதிமுக, விசிக கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதனால்அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதிலும், ஏற்கெனவே பொறுப்பேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டது. மறுபுறம் துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாததால் கோப்புகள் தேங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.
தமிழக ஆளுநர் அர்லேக்கரை, முதல்வரின் தனிச் செயலர் செந்தில்குமார் நேற்று காலை சந்தித்தார். அப்போது பதவியேற்ற அமைச்சர்களுக்கு முதல்வர் பரிந்துரை செய்த துறைகளின் பட்டியலை வழங்கினார். அதற்கு ஆளுநர் அர்லேக்கர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து முதல்வர் விஜய் உட்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் விவரப் பட்டியலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பு விவரம்: முதல்வர் விஜய்யின் பரிந்துரையை ஏற்று, மே 10-ம் தேதி பதவியேற்ற அமைச்சர்களுக்குரிய துறைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி முதல்வர் விஜய்யிடம் பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள் உள்ளன.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித் துறை, அமைச்சர் என்.ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் கே.ஜி.அருண்ராஜுகு சுகாதாரத் துறை, அமைச்சர் வெங்கட்ரமணனுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடிமைப் பொருள் விநியோகத் துறை, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறையும் தரப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, அமைச்சர் பிரபுவுக்கு இயற்கை வளங்கள் துறை, அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சி காலங்களில் பொது நிர்வாகம், உள்துறை, காவல், ஆட்சிப் பணி ஆகிய துறைகளை மட்டுமே முதல்வர்கள் வைத்திருந்தனர். தற்போது, மகளிர், இளைஞர், குழந்தைகள், நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளையும் முதல்வர் விஜய் கூடுதலாக பெற்றிருக்கிறார். இதேபோல், மற்ற அமைச்சர்களுக்கு 2 துறைகள் சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。