























Updated on
:
2 min read
டெல்லியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏசி சாதனம் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரு வயதுக் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. வெப்ப அலையின் தீவிரத்தால் ஏசி பயன்பாட்டைத் தவிர்க்க முடியாத இன்றைய சூழலில், அதைப் பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
இந்தியாவில், குடியிருப்புகளில் ஏசி பயன்பாடு 8% என்கிற அளவிலேயே உள்ளது. உலகம் முழுக்க ஏறக்குறைய 15 கோடி ஏசி சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், இந்தியாவில் அந்த எண்ணிக்கை 70 – 80 லட்சம் என்னும் அளவிலேயே இருக்கிறது. எனினும், வெப்ப அலையின் காரணமாகச் சில ஆண்டுகளாகவே ஏசி விற்பனை அதிகரித்துவருகிறது.
2025 – 2035 காலக்கட்டத்தில் ஏறக்குறைய 13 – 15 கோடி புதிய ஏசி சாதனங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருந்தது. இதற்கான சந்தையும் மிகத் துரிதமாக விரிவடைந்துவருகிறது. புதிய தயாரிப்புகள் சந்தைக்கு வரும்போது பழையனவற்றைச் சீர்படுத்திப் பயன்படுத்துகிற வழக்கமும் அதிகமாகும் என்பது இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தும்.
தவறான வயரிங், தளர்வான இணைப்புகள் போன்றவற்றால் ஏற்படும் மின்சாரக் கோளாறுகள், கம்ப்ரசர் (compressor) அதிவெப்பமடைதல், சீரான பராமரிப்பின்மை, முறையாக நிறுவப்படாமல் இருத்தல், குளிரூட்டும் வாயுக் கசிவு, மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்டவை ஏசி சாதனம் வெடித்துத் தீப்பற்றக் காரணமாகின்றன.
போதுமான குளிரூட்டும் தன்மை இல்லாமலிருப்பது, எரியும் நாற்றம் ஏற்படுவது, மின்சுற்று துண்டிப்பான் (circuit breaker) துண்டிக்கப்படுவது, ஏசி சாதனத்தில் சீறும் ஒலி போன்ற அறிகுறிகளின் வழியே, அதன் கோளாறுகளை முன்னுணர்ந்து சரிசெய்ய முற்படுவது அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்.
ஏசி சாதனம் தொடர்ச்சியாக இயங்குவதைத் தவிர்க்கக் சீரான இடைவெளியில் பயன்படுத்துவது, தீப்பற்றக்கூடிய பொருள்களை ஏசி சாதனம் அருகே வைக்காமல் இருப்பது, சுத்தமான வகையில் பராமரிப்பது, ஆண்டுக்கு 1 அல்லது 2 முறை தொழில்முறை நிபுணர்களின் சேவையை நாடுவது போன்றவற்றின் மூலமாக ஏசி சாதனத்தின் தரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
அதேநேரத்தில், நாள்பட்ட / அதீதக் கோளாறுகளைக் கொண்ட ஏசி சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குவதும் நலன் பயக்கும். இன்னொருபுறம், ஆண்டுக்கு ஆண்டு மின் நுகர்வு அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக அதீத ஏசி பயன்பாடும் உள்ளது.
குறிப்பாக, வெம்மையான பகல், இரவுப் பொழுதுகளில் அதனைப் பயன்படுத்துகிற வழக்கம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியன்று தேசிய அளவில் மின் நுகர்வு, இதுவரை இல்லாத அளவுக்கு 252 ஜிகா வாட்டாக அதிகரித்தது. ஏப்ரல் 28இல் தமிழகத்தில் மின் நுகர்வு மிக அதிகமாக 47 கோடி யூனிட்டுகளாக இருந்தது. மின்சாரப் பயன்பாடு அதிகமாகும்போது மின்வெட்டுப் பிரச்சினையும் பூதாகரமாகிறது.
உணவு, நீரைப் போலவே மின்சாரப் பயன்பாட்டையும் தேவைக்கேற்ப வகுத்துக்கொள்வதன் மூலமாக, பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும். கூடவே, மின் உற்பத்தியை அதிகரிப்பதன் வழியாக, ஏசி உள்ளிட்ட அதிக மின் நுகர்வு கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை / எதிர்பாராத பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
அரசு இயந்திரத்துடன் மக்களும் கைகோத்துச் செயல்படுவது, எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்களை முற்றிலுமாகத் தடுக்க வழிவகுக்கும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。