





























Updated on
:
1 min read
புதுடெல்லி: இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் 2026-ல் 8.3 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் 3.88 சதவீதமாக இருந்த இந்த விகிதம், ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்திருப்பது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவே முதல்முறை.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி செலவினங்கள் அதிகரித்தது ஆகியவை ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் எரிபொருள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 0.85 சதவீதமாக இருந்த இந்த பணவீக்கம், தற்போது கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரிப்பால் இந்த நிலையை எட்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கச்சா பெட்ரோலியத்தைப் பொறுத்தவரை, பணவீக்க விகிதம் ஏப்ரலில் 88.06 சதவீதத்தை எட்டியுள்ளது, இது அக்டோபர் 2021-க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். அதேபோல், எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் பணவீக்கம் 42 மாதங்களில் இல்லாத உச்சமாக 24.71 சதவீதமாக உயர்ந்துள்ளதும் கவலையளிப்பதாக உள்ளது.
உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை பணவீக்கம் 1.98 சதவீதமாகச் சற்றே உயர்ந்துள்ளது. இருப்பினும், உணவு அல்லாத பொருட்களில் பணவீக்கம் 12.18 சதவீதமாகவும், உற்பத்திப் பொருட்களில் 4.62 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. குறிப்பாக எல்பிஜி பணவீக்கம் 10.92 சதவீதமாகவும், பெட்ரோல் பணவீக்கம் 32.40 சதவீதமாகவும், டீசல் பணவீக்கம் 25.19 சதவீதமாகவும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதை அரசுத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை மற்றும் மேற்கு ஆசியப் போர் காரணமாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததே இந்த பணவீக்க உயர்வுக்கு அடிப்படை என்று பொருளாதார வல்லுநர்களின் கூறுகின்றனர்.
மே 2026-ல் இந்த ஒட்டுமொத்தப் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொடக்கூடும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மேகா அரோரா எச்சரித்துள்ளார். இதுவரை கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கான சுமையை அரசாங்கமும் எண்ணெய் நிறுவனங்களும் ஓரளவுக்குத் தாங்கிக்கொண்ட நிலையில், இனி அதன் நேரடித் தாக்கம் நுகர்வோர் மீது எதிரொலிக்கும் என்பதால் வரும் நாட்களில் நிலைமை இன்னும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。