


















Updated on:
சென்னை: “தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். சுமை தூக்கும் ஒட்டகத்தை ஏமாற்றுவதைப் போல் தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றக் கூடாது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடியில், அனுபவம் இல்லாத காரணத்தால் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது முதல்வர் தலைமையிலான தவெக அரசு. தேர்தல் நேரத்தில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், ஆட்சிக்கு வந்தால் குறு, சிறு விவசாயிகளின் பயிர்க் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது.
ஆட்சிக்கு வந்தபின் 50,000 ரூபாய் வரை கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளின் கடன் தொகை முழுமையாகவும்; 50,000 ரூபாய்க்கு மேல் பெற்றவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தது.
விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடன் தள்ளுபடி அறிவித்ததற்கு எதிராக கழகத்தின் சார்பிலும், அனைத்து விவசாய சங்கங்களின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அரசுக்கு விவசாயிகளிடையே எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்தவுடன் இப்போது, மீண்டும் ஒரு இன்ஸ்டால்மெண்ட் பாணியில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 75,000-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமை தூக்கும் ஒட்டகம் பாரம் தாங்காமல் உட்காரும்போது, அதை ஏமாற்றுவதற்காக ஒட்டகத்தின் முதுகில் இருந்து சிறு மூட்டை ஒன்றை அதன் கண்முன்னால் முதலாளி இறக்கி வைத்தவுடன் அந்த ஒட்டகம் எழுந்து நடக்கும். அதுபோல் விவசாயிகளின் சுமையைக் குறைப்பதாக ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.
இதற்கு தமிழக விவசாயிகள் ஏமாறமாட்டார்கள். தமிழக குறு, சிறு விவசாயிகள் ஒரே சமூகப் பொருளாதார நிலையில் வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்களிடையே பெரிய அளவு பொருளாதார ஏற்றத் தாழ்வு கிடையாது.
இந்த வேறுபாட்டை கணக்கில் கொள்ளாமல், விளிம்பு நிலையில் உள்ள அவர்களுக்குள் வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. ஒரே நிலையில் உள்ள குறு, சிறு விவசாயிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில், தற்போது அறிவித்துள்ள `ரூ. 75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் முழு கடன் தள்ளுபடி, மற்ற விவசாயிகள் அனைவருக்கும் ரூ.35,000 வரை தள்ளுபடி’ என்ற அறிவிப்பு சரித்திரத்திலேயே இல்லாத ஒன்றாகும். பயிரிடப்படும் பயிர்களுக்கு ஏற்றார்போல் கடன் அளவும் வேறுபடும் என்பதை தவெக அரசு உணரவில்லை.
‘உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்பதை மறந்து மனம்போன போக்கில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று, துக்ளக் பாணியில் ஆட்சி நடத்துவதை இந்த அரசு கைவிட வேண்டும். ‘உழவன் சேற்றில் கால்வைத்தால் தான் எத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சோற்றில் கை வைக்க முடியும்’ என்பதை அனுபவமற்ற முதல்வருக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
எனவே, தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。