

























Updated on:
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு, இயற்கை மருத்துவர் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒருவர் சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த 75 வயது முதியவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் முதல் மருத்துவரும் அவரது கூட்டாளியும் கூரியர் மூலம் மருந்துகளை அனுப்பினர். அந்த மருந்துகளை உட்கொண்ட பிறகும் முதியவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, இருவரும் அந்த முதியவரை நகரின் கோத்பந்தர் சாலையில் உள்ள கைமுக் சவ்பாத்தி பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு பல்வேறு மூலிகைப் பொருட்கள் கலந்த ஒரு மருந்தை கட்டாயமாக உட்கொள்ள வைத்துள்ளனர். பிறகு சிகிச்சைக்கான செலவு ரூ.56 லட்சம் என்று கூறிய அவர்கள் பணத்தைத் தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முதியவரை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன முதியவர், முதலில் ரூ.20,000 கொடுத்துள்ளார். பிறகு பல தவணைகளாக மொத்தம் ரூ.56.2 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.
ஆனாலும் இருவரும் அவரிடம் தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து அந்த முதியவர் காசர்வடவலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலி மருத்துவர் மற்றும் அவரது கூட்டாளி மீது பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。