





















தமிழக மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரணங்கள் விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர் ஆகியோருடன் சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கலந்துரையாடினார். படம்: எல்.சீனிவாசன்
Updated on
:
1 min read
சென்னை: மின்துறையில் தனிநபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக டெண்டர் வழங்கும் நடைமுறை இனி தொடராது. தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மின்துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மின்துறை அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், மின்வாரியத்துடன் தொடர்புடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள், கொள்முதல் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது: மின்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் போர்ட்டல் மூலமாக வெளிப்படையான டெண்டர் முறை அமல்படுத்தப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். கடந்த ஆட்சியில் தனிநபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக டெண்டர் வழங்கும் முறை இருந்ததாக ஒப்பந்தாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அது இனி தொடராது.
இந்த ஆட்சியில் இடைத் தரகர்கள், முறைகேடுகளுக்கு இடமில்லை. இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படும். இன்னும் ஓராண்டுக்குள் மின்துறையில் முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நஷ்டங்களைக் குறைத்து, லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “கோவை சிறுமி கொலை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் நடந்த கொலை சம்பவத்துக்கு 3 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். இன்னமும் அவரது தந்தையின் ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்ததால்தான் கடைக்கோடி கிராமங்களிலும், சென்னை கொளத்தூரிலும்கூட தவெகவுக்கு வாக்களித்துள்ளனர்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。